போதைப்பொருள் வழக்கில் சவுதி சென்றவர் கைது: உயர்நீதிமன்றத்தில் தகவல் | மதுரை செய்திகள் | Dinamalar
போதைப்பொருள் வழக்கில் சவுதி சென்றவர் கைது: உயர்நீதிமன்றத்தில் தகவல்
Added : ஆக 13, 2022 | |
Advertisement
 

மதுரை: சவுதி அரேபியாவிற்கு வேலைக்குச் சென்ற கணவரை ஆஜர்படுத்தக் கோரி மனைவி தாக்கல் செய்த வழக்கில், கணவரை அங்கு போதைப் பொருள் வழக்கில் கைது செய்து சிறையில் வைத்துள்ளதாக மத்திய அரசுத் தரப்பு தெரிவித்ததால் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பைசல் செய்தது.

பரமக்குடி தியாகவன்சேரி கிரிஜா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு:எனது கணவர் சரத்குமாருக்கு சவுதி அரேபியாவில் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை வாங்கித் தருவதாக சில புரோக்கர்கள் உறுதியளித்தனர். கணவர் சவுதி அரேபியா புறப்பட்டபோது கருவாடுகள் அடங்கிய பெட்டியை கொடுத்து, அங்குள்ள முதலாளியிடம் ஒப்படைக்குமாறு புரோக்கர் ஒருவர் தெரிவித்தார். கணவர் சவுதி அரேபியா விமான நிலையத்தில் இறங்கியதும் பாதுகாப்பாக சென்றடைந்ததாக தெரிவித்தார்.

சற்று நேரத்தில் பேசிய அவர்,'புரோக்கர்கள் ஏமாற்றிவிட்டனர். பெட்டியில் இருந்தது கருவாடு அல்ல.வேறு ஏதோ ஒரு பொருள் என விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்,' என்றார்.நான் புரோக்கர்களிடம் பேசியபோது சரியாக பதில் அளிக்கவில்லை. சவுதி அரேபியாவில் கணவர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை மீட்க நடவடிக்கை கோரி மத்திய வெளியுறவுத்துறை செயலாளர், தமிழக உள்துறை செயலாளர், ராமநாதபுரம் கலெக்டருக்கு மனு அனுப்பினேன். கணவரை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கிரிஜா மனு செய்தார்.

நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.தமிழக அரசுத் தரப்பு: மனுதாரரின் கணவரை மீட்க, சட்டரீதியான உதவிகள் செய்ய நடவடிக்கை கோரி மத்திய அரசுக்கு ராமநாதபுரம் கலெக்டர் கடிதம் அனுப்பியுள்ளார். மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தது.மத்திய அரசுத் தரப்பு: மனுதாரரின் கணவர் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சவுதி அரேபியா ரியாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இது இந்திய துாதரகம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தது.இதை பதிவு செய்த நீதிபதிகள், விரைந்து செயல்பட்டு தகவல் அளித்த துாதரக அதிகாரிகள், கலெக்டரை இந்நீதிமன்றம் பாராட்டுகிறது.இதில் நீதிமன்றம் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க இயலாது. மனு பைசல் செய்யப்படுகிறது' என்றனர்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X