இந்தியராக வாழ்வதில் பெருமை கொள்வோம்!பாரதி பாஸ்கர் எழுச்சியுரை | திருப்பூர் செய்திகள் | Dinamalar
இந்தியராக வாழ்வதில் பெருமை கொள்வோம்!பாரதி பாஸ்கர் எழுச்சியுரை
Added : ஆக 15, 2022 | |
Advertisement
 

திருப்பூர்:''இந்தியராக வாழ்வதில் பெருமை கொள்ள வேண்டும்'' என, தன்னம்பிக்கை பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசினார்.'தினமலர்' நாளிதழ் சார்பில் நடந்த சுதந்திர தின பவள விழா மெல்லோட்டம், திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியில் நிறைவு பெற்றது. அங்கு நடந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசியதாவது:சிறுவர் முதல் பெரியவர்கள் வரை, சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றனர். திருப்பூருக்கு, வாழ்த்துக்கள். இந்நிகழ்ச்சியில் பேசுவது, பரிபூரண திருப்தியை அளிக்கிறது; பேச்சாளர்களுக்கு இதுபோன்ற திருப்தி, அனைத்து இடங்களிலும் கிடைக்காது.நம் குழந்தைகளுக்கு, சரித்திரத்தை சரியாக சொல்லித்தர வேண்டும். தற்போது ஜாலியாக எவ்வித கஷ்டமும் இல்லாமல், தேசியக்கொடி பிடித்து செல்கிறோம். ஆங்கிலேயர் ஆட்சியில், இதற்கெல்லாம் அனுமதி கிடையாது.சென்னிமலையில் பிறந்து திருப்பூரில் வாழ்ந்த குமரன் தலைமையில், 8 பேர், காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்க ஊர்வலத்தில், தேசியக்கொடி பிடித்தபடி பங்கேற்றனர். அவர்களை அடக்க, 30 போலீசார் இருந்தனர்.கொடியை கீழே போடச்சொல்லி, லத்தியால் போலீசார் அடித்தனர்; குமரன் மட்டும், கொடியை கீழே போடவில்லை. அவர் தலையில் போலீசார் அடிக்க, உயிரிழக்கிறார்; அப்போதும், அவர் கையிலிருந்த கொடி, கீழே விழவில்லை.அந்தளவு தேசத்தின் மீது பற்றுக் கொண்டிருந்தார். இறந்துபோன குமரன் உடலை வாங்க நான்கு நாட்களாக யாரும் வரவில்லை. பின், நகராட்சி ஊழியர்கள், துாளிபிணமாக எடுத்துச் சென்று இறுதி மரியாதை செலுத்தினர். அவரது, மனைவி ராமாயி அம்மாள்; 14 வயதில் குமரனை மணந்தார்; 90 வயது வரை வாழ்ந்தார்.

இருண்ட பக்கத்தைஅறிவது நல்லது!
சுதந்திரத்தை கொண்டாடுவது மட்டுமின்றி, வரலாற்றில் உள்ள இருண்ட பக்கங்கள், சோகம், மானுட அழுகைகளையும் அறிந்துக் கொள்ள வேண்டும். பெயர் தெரியாத பலர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான பஞ்சாப் கவர்னர் ஜெனரல் டயர் என்பவரை, 20 ஆண்டுகளாக பின் தொடர்ந்து, இங்கிலாந்தில் அவரை சுட்டுக் கொன்றார் சதார் உதம்சிங் என்ற வீரர்; அவர், இங்கிலாந்திலேயே துாக்கிலிடப்பட்டார்.பிரிட்டிஷாரின் கொடியை கீழிறக்கி, நம் நாட்டு தேசியக் கொடியை ஏற்றினார் வீரமங்கை வேலு நாச்சியார். அதற்கு காரணமாக அவரது தோழி, பட்டியல் இனத்தைச் சேர்ந்த குயிலி என்பவர் இருந்துள்ளார். அவர் உடலில் எண்ணெய் தடவி, தீ பற்ற வைத்தபடி, பிரிட்டிஷாரின் வெடிமருந்து குடோனுக்குள் குதித்து, மனித வெடி குண்டு போன்று மாறினார்.அவரது செயலால், ஆங்கிலேயர்கள் இருப்பு வைத்திருந்த வெடி பொருட்களின் அளவு குறைந்தது. இப்படி, பெயர் தெரியாத எண்ணற்றோர், தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். அவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லும் விதமாக தான், சுதந்திர தின கொண்டாட்டங்கள் அமைகின்றன.ஆங்கிலேயர்கள் தான் ரயில் பாதை அமைத்தார்கள். ஊட்டி, கொடைக்கானலுக்கு மலை பாதை அமைத்தார்கள் என்கின்றனர். அவையனைத்தும், அவர்களது தேவைக்காக அமைத்தார்களே தவிர, நம் மக்களுக்காக அவர்கள் எதுவும் செய்யவில்லை; அனைத்து வகையிலும் நம்மை சுரண்டினர்.பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு பின் தான் இந்தியா என்ற தேசம் வந்தது என்ற கருத்து, மறுக்கப்பட்ட உண்மை. பல மாநிலங்கள் சேர்ந்து, இந்த நாடு உருவாகவில்லை; பல மாநிலங்கள், நமது நாட்டுக்குள் ஏற்கனவே உள்ளன. இந்தியர் என்பதிலும், இந்தியராக வாழ்வதிலும் பெருமை கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X