சேலம்:நிலத்தை விற்றுத் தருவதாக கூறி, 1.20 கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்துார், திருமால் நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 53. தமிழக மரவள்ளி சாகுபடி விவசாயிகள் சங்கத்தலைவர், தமிழ்நாடு விவசாய சங்க கூட்டு இயக்க மாநில செயலராக உள்ளார்.அவர், எஸ்.பி., ஸ்ரீஅபிநவிடம் அளித்த புகார் மனு:
தலைவாசல், மணிவிழுந்தானை சேர்ந்த தமிழரசன், 45; சின்னசேலம் சண்முகம், 40. ஆத்துார் பிரபா, 43, ராமசாமி, 60, ராஜசேகர், 45, ஆகியோர், எங்கள் பூர்வீக நிலத்தை விற்றுத்தரும் போர்வையில், 80 லட்சம் ரூபாயை அபகரித்து கொண்டனர்.
மேலும், நம்பிக்கை அடிப்படையில் வழங்கிய, நெல் அறுவடை இயந்திரம், ஆர்.சி., புத்தகங்கள், புரோ நோட் ஆகியவற்றையும் அபகரித்துக்கொண்டு தர மறுக்கின்றனர்.இதுகுறித்து கேட்ட போது, என்னையும், பெற்றோரையும் கொன்று விடுவதாக மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, மோசடி செய்த பணம், பொருட்கள் என, 1.20 கோடி ரூபாயை மீட்டுத்தர வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.