புதுச்சேரி : 'பிள்ளைகளின் தனித்திறமையை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கண்டறித்து ஊக்குவித்தால் அவர்கள் தலைசிறந்த குடிமகன்களாக வருவார்கள்' என அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.முதலியார்பேட்டை தொகுதி பா.ஜ., சார்பில் சுதந்திர தினத்தையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.அதன் பரிசளிப்பு விழா நேற்று அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. விழாவிற்கு பள்ளி முதல்வர் எழில்கல்பனா தலைமை தாங்கினார்.
விரிவுரையாளர் சரவணன் வரவேற்றார். ராதாகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி, அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:பள்ளிக் கல்வித்துறையில் இந்தியாவில், நாம் 4ம் இடத்தில் உள்ளோம். முதலிடத்திற்கு வர சுதந்திர தின நாளில் உறுதி ஏற்று, முயற்சிக்க வேண்டும். ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதை மாணவர்கள் உள்வாங்கி படிக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும்.லட்சியம் இல்லாத வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை. எதாவது ஒரு லட்சியம் இருக்க வேண்டும். லட்சியத்தோடு செயல்பட்டால்தான் இலக்கை அடைய முடியும்.நான் 10ம் வகுப்பில் கடைசி பெஞ்ச் மாணவனாக இருந்தேன்.
ஆனால், இன்று அமைச்சராக உங்கள் முன் நிற்கிறேன். பிள்ளைகளை பிறரோடு ஒப்பிடக் கூடாது.எல்லோருக்கும் ஒரு தனித் திறமை உள்ளது. அதைக் கண்டறிறந்து ஊக்குவித்தால் சிறந்த குடிமகன்களாக வருவர். இதை, என் அனுபவத்தில் கூறுகிறேன்.ஜீவானந்தம் அரசு பள்ளியில் படித்தபோது 11ம் வகுப்பில் தோல்வி அடைந்தேன். ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்தது எதுவும் ஏறவில்லை. இதனால் புதுச்சேரியில் இடம் கிடைக்காமல், தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக்கில் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்தேன்.அதன்பிறகு படிப்பை தொடர முடியவில்லை. பிறகு அரசியலுக்கு வந்தேன். படிக்கும்போதே மக்கள் சேவையில் ஈடுபட்டேன்.இதனால் இன்று அரசியலில் வளர்ச்சி பெற்ற அமைச்சராக வந்துள்ளேன் என்றால், அதற்கு எனது இடைவிடாத உழைப்புதான் காரணம். எனவே, யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்ற மனப்பக்குவத்துடன் செயல்பட வேண்டும்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.