போக்கு கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால்..அபாயம்! மணப்பாக்கம், முகலிவாக்கம் பகுதிக்கு அச்சுறுத்தல் | சென்னை செய்திகள் | Dinamalar
போக்கு கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால்..அபாயம்! மணப்பாக்கம், முகலிவாக்கம் பகுதிக்கு அச்சுறுத்தல்
Added : ஆக 20, 2022 | |
Advertisement
 
Latest district News


செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீர் செல்லும் போக்கு கால்வாயில் முகலிவாக்கம், மணப்பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்புக்களை முழுமையாக அகற்றாததால், வரும் பருவ மழைக்கு மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் ஆலந்துார் மண்டலம் அமைந்துள்ளது. ஆலந்துார் நகராட்சியுடன், மணப்பாக்கம், மதனந்தபுரம், முகலிவாக்கம், நந்தம்பாக்கம், மீனம்பாக்கம் ஆகியவை இணைந்து மாநகராட்சி மண்டலம் உருவாக்கப்பட்டது.இந்த மண்டலத்தில் அடையாறு, மணப்பாக்கம் கால்வாய், நந்தம்பாக்கம் கால்வாய், வீராகங்கால் ஓடை ஆகியவை நீர் வழித்தடங்களாக உள்ளன.

பருவமழை காலத்தில் ஆலந்துார், ஆதம்பாக்கம், நங்கநல்லுார், பழவந்தாங்கல், ஆலந்துார் ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. கடந்த ஆண்டு தொடர் மழையில் முகலிவாக்கம், மணப்பாக்கத்தில் பல ஆயிரம் குடியிருப்புகளில் செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீர், மழைநீர் புகுந்து பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது.குறிப்பாக, முகலிவாக்கம், ஆறுமுகம் நகர், திருவள்ளுவர்நகர், பஜனை கோவில் தெரு, கவுரிநகர், என் அண்டு டி நகர், ராஜேஷ்வரி நகர் அவென்யூ, மாத நகர், கிருஷ்ணா நகர், ஓம்சக்தி நகர், குமரி நகர் ஆகிய பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கின.அதேபோல, மணப்பாக்கத்தில், சி.ஆர்.ஆர்.,புரம், பெல் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் ௪ அடி உயரத்திற்கு தண்ணீர் சூழ்ந்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

போரூர் ஏரியின் சிறிய மதகில் இருந்து வெளியேறும் உபரிநீர், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், மதனந்தபுரம், முகலிவாக்கம், மணப்பாக்கம் வழியாக அடையாற்றில் கலக்கிறது. இது மணப்பாக்கம் கால்வாய் என அழைக்கப்படுகிறது.இது, 16 கி.மீ., நீளம் உடையது. வருவாய்த்துறை ஆவணப்படி, இந்தக் கால்வாய், 18 முதல் 25 அடி அகலம் வரை உள்ளது. இதில், மதனந்தபுரம், முகலிவாக்கம், மணப்பாக்கம் பகுதி போக்கு கால்வாயின் பல இடங்கள், ஆக்கிரமிப்பாளர் பிடியில் சிக்கி சுருங்கி, ௫ முதல் ௭ அடி அகலம் மட்டுமே காணப்படுகிறது.
கடந்த, 2016ம் ஆண்டில் போக்கு கால்வாயின் சில பகுதிகள், கான்கிரீட்டால் கட்டமைக்கப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

குறிப்பாக முகலிவாக்கத்தில் துவங்கி, அடையாறு வரை, 4 கி.மீ., வரை உள்ள கால்வாயில், 60 சதவீதம் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால், கடந்த ஆண்டு அப்பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.வரும் பருவ மழைக்குள் போக்கு கால்வாய் ஆக்கிமிப்புக்களை அகற்றி உபரிநீர், மழை நீர் எளிதாக செல்ல வழி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.ஆனால், தேவையான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புக்களை பொதுப்பணித்துறை கண்டு கொள்ளாததால், வரும் தொடர் மழைக்கு மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து அப்பகுதி நலச்சங்கத்தினர் கூறியதாவது:கடந்த ஆண்டு தொடர் மழைக்கு முகலிவாக்கம், மணப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கோடிக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.கடந்த, 2015ம் ஆண்டு பாதிப்பை உணர்ந்து கால்வாய் ஆக்கிரமிப்புக்களை, 'ஏ' ரிஜிஸ்டரில் உள்ளபடி அகற்றி, ஆழப்படுத்தி, பக்கவாட்டு சுவர் அமைத்திருந்தால், இப்பிரச்னைக்கு தீர்வு
கிடைத்திருக்கும்.

ஆனால், சில நுாறு ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக உள்ள உள்ளூர் அரசியல்வாதிகளால், பல ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதனை உணர்ந்து, வரும் பருவமழைக்குள் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி போக்கு கால்வாயை அகலப்படுத்தினால், அடுத்து வரும் மழைக் காலத்தில் பெரும் பாதிப்பில் இருந்து தப்பலாம். ஆனால், இன்றளவில் போக்கு கால்வாய் மேம்பாட்டிற்கு பல கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிட்டாலும், துளி அளவும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இதனால், அதிகமழை பெய்து, ஏரி மதகு திறக்கும் நிலை ஏற்பட்டால், மீண்டும் இப்பகுதியினர் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது.எனவே, வரும் மழைக்குகள் முடிந்தளவு ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரி உபரி நீர் எளிதில் செல்ல வகை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வெள்ள பாதிப்பில் ஏற்படும் இழப்பிற்கு பொதுப்பணித்துறை முழுக்க முழுக்க பொறுப்பேற்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் --

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X