கோவை சந்திப்பு மறுசீரமைப்பு: ரயில்வே நிலைக்குழு தலைவர் உறுதி | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கோவை சந்திப்பு மறுசீரமைப்பு: ரயில்வே நிலைக்குழு தலைவர் உறுதி
Updated : ஆக 20, 2022 | Added : ஆக 20, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
 
Latest district News

கோவை மாநகர மக்களின் ரயில்வே கோரிக்கைகள் ரயில்வே நிலைக்குழுவிடம் குவிக்கப்பட்ட நிலையில், கோவை சந்திப்பை மறுவடிவமைப்புத் திட்டத்தில் சேர்ப்பதாக குழுவின் தலைவர் உறுதியளித்துள்ளார்.மொத்தம், 26 எம்.பி.க்களை உள்ளடக்கிய லோக்சபா ரயில்வே நிலைக்குழு, அதன் தலைவர் ராதாமோகன்சிங் தலைமையில், கடந்த, 18ம் தேதியன்று மும்பையிலிருந்து கோவை வந்தது. ரயில்வே வாரியத்தின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான ரன்சனிஷ் சாஹி இக்குழுவை வழிநடத்தி வந்துள்ளார். அன்று இரவு குழுவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம், கோவை தாஜ் ஓட்டலில் நடந்தது. தெற்கு ரயில்வே பொதுமேலாளர் மல்லையா, சேலம் கோட்ட மேலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாதம் 8.5 லட்சம் பயணிகள்
கூட்டத்துக்குப் பின், கொங்கு குளோபல் போரம், கோவை தொழில் வர்த்தக சபை, கொடிசியா, சைமா, ராக், கோயம்புத்துார் டெவலப்மென்ட் கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு தொழில், சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் இணைந்து, ரயில்வே நிலைக்குழுத் தலைவர், குழு உறுப்பினர்களைச் சந்தித்து, கோவையின் ரயில்வே கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்து, விரிவாக விளக்கினர். எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணன், சேலம் கோட்ட ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ஜெயராஜ், சதீஷ் உள்ளிட்ட பலரும், இச்சந்திப்பில் பங்கேற்றனர்.அவர்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:கோவை, தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம். தெற்கு ரயில்வேயில் அதிக வருவாய் தரும் ஸ்டேஷன்களில், கோவை மூன்றாமிடத்தில் உள்ளது. சேலம் கோட்டத்தில், 45 சதவீத வருவாயைத் தருகிறது. கடந்த, 1873லேயே துவக்கப்பட்ட பழமையான ரயில்வே ஸ்டேஷன் இது. இங்கு தினமும், 130 ரயில் இயக்கங்கள் கையாளப்படுகின்றன. மாதம், 8.5 லட்சம் பயணிகள் கோவை ஸ்டேஷனை பயன்படுத்துகின்றனர்.

மீண்டும் ரயில்கள் இயக்க...
நாடு முழுவதும் உள்ள, 400 ரயில்வே ஸ்டேஷன்களை மறுவடிவமைப்பு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதில் கோவை சந்திப்பை சேர்க்க வேண்டும். தற்போதுள்ள ஆறுடன் சேர்த்து இன்னும் நான்கு பிளாட்பார்ம்களை உருவாக்க வேண்டும். கவுண்டம்பாளையம், போத்தனுார் ஆகிய பகுதிகளில், ரயில்வேக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள் உள்ளன. அங்கு 'கோச்' பராமரிப்பு பணிமனை, 26 பெட்டிகள் நீளம் கொண்ட 'பிட்லைன்' அமைக்க வேண்டும். கோவையை ரயில்வே கோட்டத் தலைமையிடமாக அறிவிக்க வேண்டும்.ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து, கோவை-திண்டுக்கல் ரயில் பாதை அகல ரயில் பாதையாக்கப்பட்டது. அதற்குப் பின், தென் மாவட்டங்களுக்கு ஐந்து ரயில் சேவைகளை மறுபடியும் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் தராமல் உள்ளது. கோவையிலிருந்து திருச்செந்துார், தூத்துக்குடி, தென்காசி, ராமேஸ்வரம் ஆகிய நகரங்களுக்கு, மதுரை வழியாக மீண்டும் ரயில்களை இயக்க வேண்டும். திண்டுக்கல்-கோவை பாசஞ்சர் ரயிலை உடனடியாக இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவைக்கு மூன்று ரயில்கள்
கோவை-பெங்களூரு இடையே, இரவுநேர ரயில் சேவை அல்லது பெங்களூரில் இருந்து புறப்படும் ரயில்களின் நீட்டிப்பு ஆகிய கோரிக்கைகளை உடனே பரிசீலிக்க வேண்டும். கோவை நகருக்குள் நெரிசலைக் குறைக்க, சுற்று ரயில் சேவையை செயல்படுத்த வேண்டும். அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அடுத்த மூன்று ஆண்டுகளில், 400 வந்தே பாரத் ரயில்கள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் மூன்று ரயில்கள் கோவைக்கு ஒதுக்கப்பட வேண்டும். இவ்வாறு, மனுவில் கோரிக்கைகள் விவரிக்கப்பட்டிருந்தன.மனுவைப் பெற்றுக்கொண்ட நிலைக்குழுத் தலைவர் ராதாமோகன்சிங், ''மறு வடிவமைப்பு திட்டத்தில் கோவை சந்திப்பு நிச்சயம் சேர்க்கப்படும்'' என்று உறுதியளித்துள்ளார். அதேபோன்று, மற்ற கோரிக்கைகளையும், முறைப்படி பரிந்துரைப்பதாக தெரிவித்துள்ளார். குழுவினர் நேற்று காலையில், கோவை ரயில்வே ஸ்டேஷனையும் ஆய்வு செய்தனர். அப்போதும் தனி நபர்கள் மற்றும் பல்வேறு அமைப்பின் நிர்வாகிகளும், ரயில்வே நிலைக்குழுவினரைச் சந்தித்து, கோவையின் ரயில்வே கோரிக்கைகளை விளக்கி மனு கொடுத்தனர்.மும்பை எம்.பி., கோரிக்கை

கோவையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டுமென்ற கோரிக்கையைக் கூட, ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இந்த ரயில் சேவை பற்றி, கோவை தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், நிலைக்குழுத் தலைவரிடம் விளக்கினர். அப்போது குழுவின் உறுப்பினரும், சிவசேனா கட்சியைச் சேர்ந்த, மும்பை தெற்கு தொகுதியின் எம்.பி.,யுமான அர்விந்த் சாவந்த்தும், அந்த ரயில் வட மாநில பக்தர்களுக்குப் பெரிதும் பயன் அளித்து வந்ததாகவும், மும்பையிலிருந்து கோவைக்கு விமானத்தில் வந்து, இங்கிருந்து ராமேஸ்வரத்துக்கு ரயிலில் தான் சென்றிருப்பதாகவும் தெரிவித்தார். இது கோவையிலுள்ள தொழில் அமைப்பினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்குப் பெரிதும் உற்சாகத்தை அளிப்பதாக இருந்தது.
-நமது சிறப்பு நிருபர்-

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X