அறிவியலும், ஆன்மிகமும் இரண்டற கலந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் அவசியத்தை இளையதலைமுறையினருக்கு எடுத்துரைக்கும்விதமாக சென்னை, வடபழநி முருகன் கோவிலில் தக்கார் சார்பில், களிமண்ணாலான விநாயகர் சிலைகள் மூன்றாம் ஆண்டாக பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி, ஹிந்துக்களின் வழிபாட்டு முறை, கொண்டாட்டம் என்பதைக் கடந்து, அதன் பின்னணியில் அறிவியல் இருப்பதையும் நாம் அறிய வேண்டியது அவசியம். பண்டைய காலங்களில், தென்மேற்கு பருவ மழைக்கு முன்னதாக குளம், குட்டை, ஏரிகள் துார்வாரி ஆழப்படுத்தப்பட்டன.
இப்பணியின்போது நீர்நிலைகளின் அடியில் தேங்கியிருந்த களிமண் தோண்டி எடுக்கப்பட்டு கரையில் சேகரித்து வைக்கப்பட்டன. துார்வாரப்பட்டதால் மிக எளிதாக நுண்துளைகளின் வழியே நீர் உள் இறங்கி நிலத்தடி நீரை உயர்த்தியது. குளத்தின் கொள்ளளவு அதிகரித்து மழையின்போது கூடுதல் நீரும் சேகரமானது.
அடுத்த பருவமழை துவங்கும் முன் இடைப்பட்ட நாட்களில், ஏற்கனவே குளத்தில் இருந்து துார்வாரப்பட்டு வெளியே எடுத்து சேகரிக்கப்பட்ட களிமண் மீண்டும் அதே குளத்தில் கரைத்துவிடப்பட்டது. அவை, நீரின் அடியில் தேங்கி நுண்துளைகளை அடைத்து நின்றன. மீண்டும் மழைபொழிந்ததும் குளம் விரைவாக நிரம்பி விவசாயம் செழித்தது; ஊரும் செழித்தது.
மக்கள் பங்கேற்பு
'இந்த பொதுப்பணியில் நீங்களும் வந்து இணைந்துகொள்ளுங்கள்' என அழைப்பு விடுத்தாலும் அவ்வளவாக கிராம மக்கள் திரண்டு வந்து முழுமையான பங்களிப்பினைச் செலுத்தமாட்டார்கள் என கருதி, இதில், ஆன்மிகத்தையும் நம் முன்னோர் புகுத்தினர்.அதாவது, துார்வாரப்பட்ட களிமண்ணை பொதுமக்கள் எடுத்துச் சென்று அவரவர் வீடுகளில் பிள்ளையார் பிடித்து வைத்து, வழிபாட்டிற்குப்பின் மீண்டும் அவற்றை குறிப்பிட்ட நாளில் நீர் நிலைகளில் கரைக்க வேண்டும் என, ஒரு வழிபாட்டு முறையினை உருவாக்கினர்.
மக்களும் அதிகளவில் பக்தி பரவசத்துடன் பங்கெடுத்தனர் என்பதை, வரலாற்றுத்தரவுகளின் வாயிலாக அறிய முடிகிறது.இவ்வாறு துவங்கிய விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறையானது, ஹிந்து மதத்துக்குரியது என்பது மாறி, பின்னாளில் மாற்று மதத்தினரும் ஏற்றுக்கொண்டு வரவேற்பு அளித்தும், மரியாதை செலுத்தியும் வருகின்றனர். இந்நுாற்றாண்டின் இடையிலிருந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட முறைகள் காலத்துக்கேற்ப மாறிவிட்டன.
ஆனால், இன்றைய இளைய தலைமுறையினரிடம், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் நோக்கம், வழிபாட்டு முறைகளை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. இந்த குறையை களையும் விதமாகவே, வடபழநி கோவிலில் விநாயகர் சிலைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
அனைத்து கோவிலிலும்...
கோவில்களில் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தி நிர்வகிப்பது, சொத்துக்களை பாதுகாப்பது என்பதைத் தாண்டி, ஹிந்து தர்மத்தை காப்பதும், அதை ஹிந்துக்களுக்கு எடுத்துரைப்பதும், பாரம்பரியமாக கடைபிடித்துவரும் ஹிந்து வழிபாட்டு முறைகளை புதிய தலைமுறையினருக்கு போதிப்பதும், அறநிலையத்துறையின் பொறுப்பு.
எனவே, தமிழகம் முழுவதுமுள்ள கோவில்களில் விநாயகர் சதுர்த்தியின்போது சிறிய கோவில்களில் ஒரு விநாயகர் சிலை முதல், பெரிய கோவில்களில் ஆயிரம் சிலைகள் வரை பக்தர்களுக்கு இலவசமாக வழங்கலாம்.'ஹிந்துக்களுக்காக இந்த அரசு ஒன்றுமே செய்யவில்லை' என்ற சிலரின் குற்றச்சாட்டை, இதுபோன்ற நடவடிக்கைகளின் வாயிலாகவாவது எதிர்கொள்ளலாம்.
இதுகுறித்து, துறை அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்கும்பட்சத்தில் யூக நடைமுறைச்சிக்கல்களை காரணம்காட்டி அவர்கள் தவிர்க்கவே செய்வர். அதையும் கடந்துதான் அமல்படுத்த வேண்டும்; செய்வாரா இத்துறையின் அமைச்சர் சேகர்பாபு?
- நமது நிருபர் -