பாப்பிரெட்டிப்பட்டி : தர்மபுரி, கடத்துார் யூனியனில் சேர்மன் உள்ளிட்ட, 13 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் அ.தி.மு.க.,வை சேர்ந்த உதயா சேர்மனாகவும், பா.ம.க.,வை சேர்ந்த சக்திவேல் துணை சேர்மனாகவும் உள்ளனர். நேற்று ஒடசல்பட்டியில் உள்ள அலுவலகத்தில் யூனியன் சேர்மன் உதயா தலைமையில் பி.டி.ஓ.,க்கள் கல்பனா, ரேணுகா தேவி முன்னிலையில் கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், துணை சேர்மனாக உள்ள சக்திவேல் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி கடந்த, 10 மாதங்களுக்கு முன், தீர்மானம் கொண்டு வந்தனர். பின் மாவட்ட கலெக்டர் மற்றும் ஆர்.டி.ஓ.,விடம் மனு அளித்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து, யூனியன் சேர்மன் உதயா உள்ளிட்ட அ.தி.மு.க.,-பா.ம.க.,-தி.மு.க.,வை சேர்ந்த, 10 கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து, கவுன்சிலர்கள் ஜெயகுமார், முத்துக்குமரன், சங்கர் ஆகியோர் கூறுகையில், '10 மாதங்களுக்கு முன், மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து, வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தனர். துணை சேர்மன் சக்திவேல், பா.ம.க.,விலிருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.