கரூர் : புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, கரூர், தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரசித்தி பெற்ற, கரூர், தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் புரட்டாசி விழா வரும் 27ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து, நாள் தோறும் சிறப்பு வாகனங்களில், சுவாமி திருவீதி உலா, அக்டோபர் 3ல் மாலை 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 5ல் காலை 9:15 மணிக்கு தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இன்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, கோவிலில் விரதம் தொடங்கும் பக்தர்கள், வரிசையில் செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சுவாமி தரிசனம் முடிந்த பிறகு, பக்தர்கள் அமர வசதியாக, கோவில் வளாகத்தில் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.