மணலி:மண்டல அளவிலான ஹாக்கி போட்டியில், சின்னசேக்காடு அரசு உயர் நிலைப் பள்ளி மாணவ - மாணவியர் அசத்தல் வெற்றி பெற்றனர்.
சென்னை, திருவொற்றியூர், பெரியார் நகரில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள், 12ம் தேதி நடந்தது. இதில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பங்கேற்று, அபாரமாக விளையாடின.ஹாக்கி போட்டியில், 14 வயதுக்குட்பட்டோர் ஜூனியர் பிரிவில் சின்ன சேக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ - மாணவியரும், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான சீனியர் பிரிவில் மாணவியரும் வெற்றி பெற்று அசத்தினர்.
இந்த நிலையில், வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியை உஷா மற்றும் உடற்கல்வித்துறை ஆசிரியர் லுாயிஸ் பாராட்டினர்.இப்பள்ளியைச் சேர்ந்த மாணவ - மாணவியர், ஹாக்கி போட்டியில் தொடர்ந்து பரிசுகள் மற்றும் பதக்கங்களை வென்று அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.