கோயம்பேடு:கோயம்பேடு சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணிபுரிந்து வருபவர் ராஜன் பாபு, 48. நேற்று முன்தினம் இவரது உதவியாளரின் மொபைல் போன் 'வாட்ஸ் அப்'பில் தொடர்பு கொண்ட நபர், தன்னை லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் என அறிமுகம் செய்துள்ளார்.
பின், ராஜன் பாபு வீட்டை சோதனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து, ராஜன் பாபுவிடம் உதவியாளர் தகவல் தெரிவித்ததும், அந்த நபரை தன் அலுவலகத்திற்கு வரும்படி கூறி உள்ளார்.அலுவலகம் வந்த அந்த நபர், ராஜன்பாபுவின் காரில் அவரது வீட்டிற்குச் சென்று சோதனை செய்தார். சிறிது நேரத்தில் சோதனை முடித்து, மீண்டும் அவரது காரிலேயே ராஜன்பாபுவின் அலுவலகம் வந்து இறங்கி, அங்கிருந்து கிளம்பியுள்ளார்.
பின், அந்த நபர் குறித்து விசாரித்த போது, அவர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் இல்லையென தெரிந்தது. இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில், ராஜன் பாபு புகார் அளித்தார். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, அந்த நபர் யார், எதற்காக லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் எனக் கூறி வீட்டில் சோதனை செய்தார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.