தாம்பரம்:புறநகரில், போலி ஆவணங்கள் தயார் செய்து, அதன் வாயிலாக பல கோடி ரூபாய் மோசடி செய்து வந்த, 'பலே' கில்லாடியை, தனிப்படை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
கூடுவாஞ்சேரியில், 21 சென்ட் நிலத்தை ராஜாமணி, சுப்பிரமணி என்பவர்களிடம், 1.70 கோடி ரூபாய்க்கு ஜெகநாதன் விலை பேசி வாங்கி உள்ளார்.இதற்கு, 30 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்த ஜெகநாதன், மீதி பணத்தை தராமல் ஏமாற்றியுள்ளார். மேலும், அவர்களுக்கு தெரியாமல், அவர்களது கையெழுத்து இல்லாமல், போலியாக லைப் சர்டிபிகேட்' தயார் செய்துள்ளார்.
அதை வைத்து, அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தருவதாக, 20 நபர்களிடம் கூறியுள்ளார். வீட்டுக்காக பதிவு செய்த நபர்களின் பெயரில், வங்கியில் 8 கோடி ரூபாய் வரை வீட்டுக் கடன் பெற்று, கட்டடத்தை முழுமையாக கட்டாமல் ஏமாற்றியுள்ளார்.பல்லாவரத்திலும், இதுபோல் வீடு கட்டி வருவதாக ஏமாற்றியுள்ளதும் தெரிந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் ஜெகநாதனை கைது செய்து, ஆலந்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.