கோயம்பேடு:புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து பெருமாளை வணங்குவது ஹிந்துக்கள் வழக்கம். இதனால், பலரும் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பர்.
இந்நிலையில், நேற்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை மற்றும் இன்று மகாளய அமாவாசை என்பதால், நேற்று கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. கோயம்பேடு சந்தைக்கு, நேற்று முன்தினம் 520 லாரிகளில் 50 லட்சம் கிலோ காய்கறிகள் வந்த நிலையில், நேற்று 580 லாரிகளில் 60 லட்சம் கிலோ காய்கறிகள் வந்தன.
காய்கறிகள் வரத்து நேற்று அதிகரித்தும், நுகர்வோர்கள் குவிந்ததால் விலை குறையாமல் நேற்று முன்தின விலைக்கே விற்பனையானது.நேற்று முன்தினம் 8 லட்சம் கிலோ கேரட் வந்த நிலையில் நேற்று 10 லட்சம் கிலோ கேரட் வந்துள்ளது. நேற்று 51 ஆயிரம் கிலோ தக்காளி வந்துள்ளது. இருந்தும் விலை குறையவில்லை.இதையடுத்து, ஒரு கிலோ தக்காளி, 25 -- 33 ரூபாய்க்கும், கேரட் -80 -- 100 ரூபாய்க்கும் சவ் சவ் - 20 -- 22 ரூபாய்க்கும், முட்டைகோஸ் - 15 -- 20 ரூபாய்க்கும், வெண்டைக்காய் -15 -- 20 ரூபாய்க்கும் விற்பனையாகின.