அவிநாசி:பசுமை தமிழகம் இயக்கத்தின் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்திற்கு 2022- - 23ம் ஆண்டிற்கான இலக்காக 4.70 லட்சம் மரக்கன்றுகள் நட நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் மூலம் வேம்பு, புங்கன், ஆலமரம், அரசமரம் உள்ளிட்ட 12 வகையான உள்நாட்டு மர வகைகளின் மரக்கன்றுகள் வனத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும். இவ்வாறாக உற்பத்தி செய்த மரக்கன்றுகள் விவசாய நிலங்கள், கல்வி நிலையங்கள், தனியார் நிலங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிலங்களில் நடப்பட்டு அவை பராமரிக்கப்படும்.திருப்பூர் மாவட்டத்தில் 2022- -23ம் ஆண்டில், 203.95 ஏக்கர் பரப்பில் விவசாய நிலங்களிலும், 49.50 ஏக்கர் பரப்பில் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களிலும், 29.75 ஏக்கர் பரப்பில் அரசுக்கு சொந்தமான நிலங்களில் என மொத்தம் 28,320 ஏக்கர் பரப்பில் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கான துவக்க விழா, அவிநாசி அரசு கலைக்கல்லுாரியில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி பங்கேற்று மரக்கன்று நட்டு வைத்து, பசுமை தமிழகம் இயக்கத்தை துவக்கி வைத்தனர்.கலெக்டர் வினீத், ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் தேஜஸ்வி, மாவட்ட வனவியல் விரிவாக்க ஆய்வாளர் கிருஷ்ணசாமி, கல்லுாரி முதல்வர் நளதம், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.