நாமக்கல் போலீஸ் உட்கோட்டம் சார்பில், நாமக்கல்லில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது. இதில் நாமக்கல், நல்லிபாளையம், மோகனுார், எருமப்பட்டி, சேந்தமங்கலம், புதுச்சத்திரம், வாழவந்திநாடு, செங்கரை மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசன் என, மொத்தம், 9 போலீஸ் ஸ்டேசன்களுக்கு உட்பட்ட, பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதில், எளிதில் தீர்க்கக் கூடிய பணம் கொடுக்கல் வாங்கல், நிலத்தகராறு, வாய்த்தகராறு உள்ளிட்ட சிறிய பிரச்னைகள் என, மொத்தம், 300க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டன.
இதுகுறித்து நாமக்கல் டி.எஸ்.பி., சுரேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், போதை பொருள், குட்கா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையும் முழுமையாக தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்ற சம்பவங்களை குறைக்க, 28 பேர் மீது குண்டாஸ் வழக்கு போடப்பட்டுள்ளது. அதேபோல தொடர் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட, இரண்டு பேர் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது. கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட, மூன்று பேரில், ஒருவர் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது. மீதமுள்ள, இரண்டு பேருக்கு விரைவில் குண்டாஸ் போடப்படும்.
நாமக்கல் நகரில், 157 இடங்களில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், வாகனத்தின் பதிவுகளை கண்டறியும், அதிநவீன கேமரா, நான்கு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் வாகனங்களில் தப்பி செல்பவர்களை எளிதாக பிடிக்க முடியும். தொடர்ச்சியாக சந்துக்கடைகளில் மது விற்பனை செய்வது தெரிய வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.