திருவண்ணாமலை : போலி ரயில்வே முன்பதிவு இணையதளத்தை பயன்படுத்தி, 56 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பீஹார் வாலிபரை, திருவண்ணாமலை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
ஒரு மாதத்துக்கு முன், காட்பாடி, சி.எம்.சி., மருத்துவமனை பகுதிகளில், ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தி இருவரை கைது செய்தனர்.விசாரணையில், 'தட்கல் சாப்ட்வேர் ஆல்.இன்.,' என்ற இணையதளம் மூலம், சாப்ட்வேரை வாங்கியதும், பீஹார் மாநிலம், தானாபூர் பகுதி சைலேஷ்யாதவ், 27, விற்பனை செய்ததும் தெரிந்தது.
பீஹார் சென்று அவரை கைது செய்து, நேற்று முன்தினம் திருவண்ணாமலை அழைத்து வந்து விசாரித்தனர்.இதில், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்திற்குள் சென்று, டிக்கெட் முன்பதிவு செய்வது போல சாப்ட்வேர் உருவாக்கிய, 10 பேரிடம், அதை வாங்கியது தெரியவந்தது.
இதை அவரது இணையதளமான, 'தட்கல் சாப்ட்வேர் ஆல்.இன்.,' வாயிலாக, 3,485 பேரிடம், ஒன்பது மாதமாக டிக்கெட் விற்று, 98 லட்சத்து, 20 ஆயிரத்து, 946 ரூபாய் வருவாய் ஈட்டியதும் தெரிந்தது. இதில், 75 சதவீதம் சாப்ட்வேர் உருவாக்கி தந்தவர்களுக்கும், மீதியை சைலேஷ் யாதவும் பங்கிட்டு கொண்டுள்ளனர்.
இந்த சாப்ட்வேரால் நாடு முழுதும், 7,000 ரயிலில் பயணம் செய்ய, எட்டு மாதத்தில் 1.25 லட்சம் டிக்கெட்டுகளை, 56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பதிவு செய்து விற்பனை செய்துள்ளதும் தெரியவந்தது.இதற்காக, 13 மொபைல்போன், நான்கு போலி வங்கி கணக்கு பயன்படுத்தியுள்ளனர்.