திண்டுக்கல் : ''தமிழகத்தில் கலவரத்தை துாண்ட சதி நடக்கிறது,'' என, திண்டுக்கல் குடைபாறைப்பட்டியில் மர்ம நபர்கள் பா.ஜ., மேற்கு நகர தலைவர் பால்ராஜூக்கு சொந்தமான டூவீலர்களை தீ வைத்து எரித்ததை பார்வையிட்ட ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சாடினார்.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா திட்டமிட்டு நாட்டை பிரிக்க வேண்டும். ஹிந்து என கூறக்கூடாது என்ற நோக்கத்தில் செயல்படுகிறது. பணம் கொடுத்து இதுபோல் பயங்கரவாத செயலில் ஆட்களை ஈடுபடுத்துகிறது. இது தமிழகத்தில் பெரிய அளவில் நடக்கிறது. ஆட்சியாளர்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். உளவுத்துறை இதை கண்காணிக்காமல் உள்ளனர்.
தமிழகத்தில் கலவரத்தை துாண்டுவதற்கான சதித்திட்டம் தீட்டியுள்ளனர். மத்திய அரசு தமிழக அரசை 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும்.தி.மு.க., கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பா.ஜ.,வையும், மத்திய அரசையும் கண்டிக்கிறாரே தவிர குண்டுவீச்சு சம்பவங்களை பேசவில்லை. அரசு இச்சம்பவங்களுக்கு ஆதரவாக உள்ளதா. தமிழக அரசு ஹிந்துக்களுக்கு விரோதமாக உள்ளது, என்றார்.