கரூர்; 10 ரூபாய் நாணயம் செல்லும் என, பொதுமக்கள், வியாபாரிகளிடையே மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாட்டில் தற்போது, ஒரு ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டு புழக்கத்தில் உள்ளன. பத்து ரூபாய் நாணயம் தவிர, மற்ற நாணயங்களை அனைத்து தரப்பு மக்களும் கொடுக்கல் வாங்கலுக்கு உபயோகத்தில் மக்கள் ஏற்றுக்
கொள்கின்றனர்.
ஆனால், 10 ரூபாய் நாணயத்தை மட்டும் வங்கிகள் உள்பட பல்வேறு வியாபார நிறுவனங்கள், பஸ் நடத்துநர்கள், பொதுமக்கள் பல்வேறு இடங்களில் பெற்றுக் கொள்ள மறுக்கின்றனர். அரசு ஏற்கனவே 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என அறிவித்துள்ளது.
ஆனால் நடைமுறையில் பொதுமக்கள், வணிக நிறுவனத்தினர் 10 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்ள மறுப்பதால் சில சமயங்களில் தகராறு ஏற்பட்டு வருகிறது. இதனால் 10 ரூபாய் நாணயம் வைத்திருப்பவர்கள் அவற்றை உபயோகிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து கரூரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
ரயில்வே ஸ்டேஷன், பஸ்கள் உட்பட பல்வேறு இடங்களில், 10 ரூபாய் நாணயம் வாங்க மறுத்தால், கரூரில் உள்ள தலைமை வங்கியிடம் (லீட் பேங்க்) புகார் அளிக்கலாம். வங்கி ஊழியர்கள், 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால், அதற்கான காரணம் குறித்து எழுதி தாருங்கள் என்று கேட்கலாம். அல்லது மொபைலில் படம் பிடித்து புகார் அளிக்கலாம். ஆனால் இந்த நடைமுறைக்கு பலனில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். கரூர், க.பரமத்தி, அரவக்குறிச்சி, குளித்தலை உட்பட பல்வேறு பகுதிகளில் 10 ரூபாய் நாணயம் பெற்றுக் கொள்ள வங்கி உள்ளிட்ட பல்வேறு வியாபார நிறுவனங்கள் மறுக்கின்றன. எனவே, பத்து ரூபாய் நாணயங்கள் செல்லும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் மாவட்டம் நிர்வாகம் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.