குடியாத்தம்: வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே தோனிகான்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் கணபதி, 65, ராம்குமார், 45, குப்பன், 68. விவசாயிகள். இவர்களுக்கு சொந்தமான ஐந்து ஆடுகள் அருகிலுள்ள கல்லப்பாடி காப்புக்காட்டில் புல் மேய்ந்து கொண்டிருந்தது.
இரவு வீடு திரும்பாததால் நேற்று காப்புக்காட்டுக்குள் விவசாயிகள் இன்று சென்றனர். அதில் சிறுத்தை தாக்கியதில் ஐந்து ஆடுகள் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்துள்ளது. இறந்த ஆடுகளை துாக்கி வந்த போது மீண்டும் சிறுத்தைகள் உருமும் சத்தம் கேட்டுள்ளது.
இதனால் ஒரு ஆட்டை மட்டும் துாக்கிக் கொண்டு மற்ற ஆடுகளை அங்கேயே போட்டு விட்டு விவசாயிகள் வந்து விட்டனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது குறித்து, வனத்துறையினருக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.
குடியாத்தம் வனத்துறையினர் கூறியதாவது: ஆந்திரா மாநிலம், சித்துார் வனப்பகுதியிலிருந்து சிறுத்தைகள் அதிகளவு தமிழக வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்து வருகிறது. இதனால் காப்புக்காடுக்குள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் என விவசாயிகளுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சிறுத்தைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.