கொட்டாம்பட்டி : கருங்காலக்குடி துவக்கப்பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதால் சுற்றுச்சுவர் கட்ட கோரி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
கருங்காலக்குடியில் 114 வருடங்களாக செயல்படும் துவக்கப்பள்ளியில் 173 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் ஏற்கனவே இருந்த சுற்றுச்சுவரை இடித்து விட்டு புதிய சுவர் கட்டித் தருவதாக கூறி ஊராட்சி சார்பில் இடிக்கப்பட்டது. ஆனால் சுற்றுச்சுவர் பாதி கட்டியதோடு நிறுத்தப்பட்டது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. சுற்றுச்சுவர் கட்ட பள்ளிக் கல்வித் துறை, பி.டி.ஓ., க்களுக்கு மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ரூ.23.70 லட்சம் ஒதுக்கி நிலுவையில் உள்ளது.
அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் பெற்றோர் நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர். பி.டி.ஓ., செல்லப்பாண்டியனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஆர்.டி.ஓ., பிர்தவுஸ் பாத்திமா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் அர்விந்த் உள்பட அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்தனர். கலெக்டரை சந்திந்து சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து பெற்றோர் கலைந்து சென்றனர்.
பெற்றோர் கூறுகையில், ''சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளியினுள் நுழைந்து மாணவர்களை கடத்தியது, மாடு முட்டியதால் காயம், குடிமகன்களால் மாணவர்களுக்கு பாதிப்பு என பல குறைபாடுகள் உள்ளன. அதனால் பள்ளி இடத்தை உரிய முறையில் அளவீடு செய்து உடனே சுற்றுச்சுவரை கட்ட வேண்டும்'' என்றனர்.