மதுரை : 'ஆற்றங்கரையோரம் கேட்பாரின்றி கிடக்கும் காட்டு பீர்க்கங்காய்களை, ஏற்றுமதி செய்தால் அதிக லாபம் ஈட்டலாம்' என, கோவை பாரதியார் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் ஆதலையூர் சூரியகுமார் பேசினார்.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, இளங்கோ முத்தமிழ் மன்றம் சார்பில் 'பீர்க்கை' நாவல் வெளியீட்டு விழா நடந்தது. மார்க்கெட்டிங் மேலாளர் பாண்டியராஜன், நிர்வாக அதிகாரி பொற்கைப் பாண்டியன், இளங்கோ முத்தமிழ் மன்ற செயலாளர் சங்கரலிங்கனார், கவிஞர் ரேணுகா பங்கேற்றனர்.
நுாலை வெளியிட்டு ஆதலையூர் சூரியகுமார் பேசியதாவது: பீர்க்கங்காயில் ஒருவகை காட்டு பீர்க்கங்காய். நதியோரங்களில் அதிகம் விளைகிறது. இதன் கசப்பு சுவையால், நாம் அதிகம் பயன்படுத்துவதில்லை. இதனை நாம் பாத்திரம் கழுவும் நைலான் நார் போன்று பயன்படுத்தலாம். இந்த நார் எதிர்ப்பு சக்தி கொண்டவை என்பதால், நோய்க்கிருமிகளை பாத்திரங்களில் தங்க விடாது.
காட்டு பீர்க்கங்காய் நார் ஒன்று உள்ளூர் சந்தையில் ரூ. 20 முதல் ரூ.50 வரை விற்கிறது. வெளிநாடுகளில் 'நேச்சுரல் ஸ்க்ரப்பர்' என்ற பெயரில் ரூ. 2000 க்கு விற்கிறது. ஆற்றோரம் கவனிப்பாரின்றி கிடக்கும் இந்த பீர்க்கங்காய் நாரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதிக லாபம் ஈட்டலாம். இதனை நுாலில் வெளிப்படுத்தியுள்ளேன், என்றார்.