கோவை;''கரும்பு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்,'' என, மாநில சர்க்கரை துறை இயக்குனர் ஹர்மந்தர் சிங் பேசினார்.இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் அங்கமான, கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தின் சார்பில், கரும்பு விவசாயிகளுக்கான கன்னல் விழா, நிறுவன வளாகத்தில் நடந்தது.கரும்பு விவசாயத்தில் நவீன எந்திரமயமாக்கல் குறித்த கருத்தரங்கில், மாநில சர்க்கரை துறை இயக்குனர் ஹர்மந்தர் சிங் காணொலி காட்சி வழியாக பேசுகையில், ''கரும்பு விவசாயத்தில் லாபம் ஈட்ட, பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. பிற மாநிலங்களில் கரும்பு உற்பத்தி செலவு குறைவாக உள்ளது. அதேபோல், தமிழகத்திலும் உற்பத்தி செலவை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆட்கள் பற்றாக்குறை, நீர் மேலாண்மை ஆகியவற்றுக்கு பல்வேறு புதிய எந்திரங்கள் வந்துள்ளன. விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும்,'' என்றார்.கரும்பு ஆராய்ச்சி வல்லுனர் நாகேந்திரன் கரும்பு சாகுபடியில், நவீன தொழில்நுட்பங்கள், எந்திரமயமாக்கல் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். புதுமையான திட்டங்களை செயல்படுத்திய விவசாயிகளுக்கு, விருதுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, கரும்பு இனப்பெருக்கு நிறுவன முதன்மை விஞ்ஞானி புத்திர பிரதாப் வரவேற்றார். இயக்குனர் ஹேமபிரபா தலைமை வகித்தார்.