காலம் காலமாக, மாணவர்கள் கல்லூரிகளுக்கு சென்று கல்வி பயின்று, அதன்பிறகு வேலைவாய்ப்பிற்கான அடிப்படை திறன்களை வளர்த்துக்கொண்டு பணியில் அமர்கின்றனர். அங்கு, குறைந்தபட்சம் ஓன்று அல்லது இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்ற பிறகுதான் அவரவர் சார்ந்த தொழில் துறையை பற்றிய புரிதலை பெறுகின்றனர். அதன்பிறகே தேவையான பணித்திறன்களையும் வளர்த்துக்கொள்கின்றனர்.
இத்தகைய நிலையை மாற்றி, படிக்கும் காலகட்டத்திலேயே பணி அனுபவம் பெறும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டியதன் அவசியம் உள்ளது. இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால், தொழில் நிறுவனங்களில் தற்போது பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களையே பாடத்திட்டமாகவும், அவற்றில் மேற்கொள்ளப்படும் செயல்வழி பயிற்சியே பணி அனுபவத்திற்கும் இணையானதாக மாற்றுவதே இன்றைய தேவை. இத்தகைய பாடத்திட்டத்தை கொண்ட ஒரு படிப்பு மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
புதிய பாடத்திட்டம்
இவ்வாறான இன்றைய தேவையின் அடிப்படையில், புதிய பாடத்திட்டத்தை 'கல்வியம்' செயல்படுத்தி உள்ளது. அதன்படி, முதல் ஆண்டு முடியும் போதே முன்னணி நிறுவனங்களில் நேரடி செயல்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது. கல்லூரி வகுப்புகள் அனைத்தும் அலுவலகம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை பெற்றுள்ளன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஏற்கனவே பணிபுரிந்து வரும் சிறந்த அனுபவமிக்க தொழில் துறையினரே ஆசிரியராக மாணவர்களுக்கு பயிற்றுவிக்கின்றனர். சந்தையில் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் துறை சார்ந்து நவீன தொழில்நுட்பங்களே இங்கே பாடமாக பின்பற்றப்படுகிறது. மாணவர்களும் செயல் அனுபவத்தின் அடிப்படையிலேயே கற்றுக்கொள்கின்றனர்.ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், பேங்கிங், காமர்ஸ் போன்ற பிற துறைகளில் இதுபோன்ற செயல்திட்ட அனுபவ கல்வியை கற்பிப்பது கடினம். ஆனால், ஐ.டி., துறையில் இதனை நடைமுறைப்படுத்த முடியும். கம்ப்யூட்டர் வாயிலாக தற்போது தொழில்நிறுவனங்கள் பயன்படுத்தும் நவீன சாப்ட்வேர் மற்றும் உள்கட்டமைப்புகளை மாணவர்களுக்கு வழங்குவது எளிதானது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நேரடியாக ஐ.டி., நிறுவனங்களில் பணி புரிவது போன்ற சூழலில் கற்றுக்கொள்வது என்பது இங்கே சாத்தியமாகிறது. அந்த நான்கு ஆண்டுகளில், இளநிலை பட்டத்துடன் நவீன தொழில்நுட்பங்களில் உரிய பயிற்சியும், அனுபவமும் பெற்று உடனடியாக பணியில் அமர்வதற்கு தேவையான தகுதிகளையும் வளர்த்துக்கொள்ள முடியும்.
தேவையான தகுதிகள்
வேலைவாய்ப்பு நேர்காணலில் தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும், தொடர்பியல் திறன், கற்பனை வளம், பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறன் ஆகியவற்றையே அடிப்படை திறன்களாக எதிர்பார்க்கின்றன. இத்தகைய திறன்களுடன் ஐ.டி., துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்களை தேர்வு செய்து, இப்படிப்பை அவர்களுக்கு வழங்குவதே சரியானது. இதன்படி, அறிவியல் பாடப்பிரிவை கொண்ட மாணவர்கள் என்று மட்டும் இன்றி, 12ம் வகுப்பு அல்லது டிப்ளமா படிப்பில் எந்த பிரிவை படித்த மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.