அன்னுார்;கோவை மாவட்டம், அன்னுார் அருகே கஞ்சப்பள்ளியை சேர்ந்த சிவகுமார் மகன் சுஜித், 22; பெயின்டர். இவர் நான்கு நாட்களுக்கு முன் கஞ்சப்பள்ளியில் ஒரு பள்ளத்தில் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தார். அருகே மின் கம்பமோ, மின்சார ஒயரோ இல்லை.அன்னுார் போலீசார் விசாரணையில், கஞ்சப்பள்ளி துரைசாமி, 59, என்பவர் தனது தோட்டத்தில் கள் இறக்கி வந்துள்ளார். திருட்டுத்தனமாக யாரும் கள்ளை குடிக்காமல் இருக்க தனது தோட்டத்து வேலிக்கு மின் இணைப்பு கொடுத்துள்ளார். சம்பவத்தன்று இரவு திருட்டுத்தனமாக கள் குடிக்க வந்த சுஜித் மின்சாரம் தாக்கி இறந்தார். ஊத்துப்பாளையம், ரங்கசாமி, 45, ருத் ராம்பாளையம் குணசேகர், 48, கஞ்சப்பள்ளி பழனிச்சாமி, 57 ஆகியோரின் உதவியுடன் சுஜித்தின் உடலை துரைசாமி வேறு பக்கம் வீசி உள்ளார்.மின்வேலி அமைக்கவும், அகற்றவும் தாசபாளையம் வெங்கிட்டான், 50, மின் வாரிய முன்னாள் ஊழியர் கஞ்சப்பள்ளி முத்துக்குமார், 50 ஆகியோர் உதவியது தெரியவந்தது. அன்னுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான போலீசார், ஆறு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.