திருவள்ளூர்-திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், பெண் துாய்மை பணியாளருக்கு சுகாதார பயிற்சி மற்றும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்து, துாய்மை பணியாளர்களுக்கு சுகாதாரம் மேம்படுத்துவது குறித்த ஆலோசனை மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பதாகை வெளியிட்டு பேசியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில், பள்ளி மாணவர்களிடையே நிலவும் போதைப் பழக்க வழக்கங்களுக்கு ஆளாகும் நிலையில் உள்ள வளரிளம் மாணவர்களை மீட்டெடுப்பது மற்றும் தடுப்பது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.முதற் கட்டமாக புழல், வில்லிவாக்கம், மீஞ்சூர் மற்றும் சோழவரம் ஆகிய நான்கு ஒன்றியங்களைச் சேர்ந்த 1.25 லட்சம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.துாய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்கள் தங்களது உடல் நலத்தை காத்துக் கொள்கிற வகையில் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும்.பொதுமக்களிடையே சுகாதாரம் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து எடுத்துரைக்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.பெண் துாய்மை பணியாளர்களுக்கு மறுமுறை பயன்படுத்தக் கூடிய சுகாதார பெட்டகத்தை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயகுமார், முதன்மை கல்வி அலுவலர் ராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.