கள்ளக்குறிச்சி,-கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அரசு கல்லுாரியில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பயிற்சியில், மாணவ, மாணவியர்களுக்கு ஒழுக்கம், ஆங்கில மொழியில் சரளமாக உரையாடுவதற்கும், வேலை வாய்ப்பு குறித்த நேர்காணலை எதிர்கொள்வதற்கான பயிற்சிகள், தன்னம்பிக்கையை வளர்த்தல், வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், கலெக்டர் ஷ்ரவன்குமார் பேசுகையில், 'இப்பயிற்சியின் முக்கிய நோக்கமே தாழ்வு மனப்பான்மையை போக்கி, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதுதான். வாழ்வில் உன்னதமான நிலையை அடைவும், சிறந்த சமுதாயத்தையும், தலைமுறையினையும் உருவாக்குவதாகும்.கல்லுாரி மாணவ, மாணவியர்கள் இத்திறன் பயிற்சியை பயின்றதோடு மட்டுமல்லாமல், வாழ்க்கையில் இதனை முறையாக செயல்படுத்தி தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும்' என்றார். பயிற்சி முடித்த 20 மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட இயக்குநர் ராஜா, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலர் முரளிதரன், தொழில் மைய உதவி இயக்குனர் கலைச்செல்வி, மகாத்மா காந்தி தேசிய பயிற்சி மாணவி சுஜாதா, மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.