நெல்லிக்குப்பம்-மதுபாட்டில்களுடன் பெண்ணையாற்றில் மூழ்கி இறந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பெண்ணையாற்று வழியாக நெல்லிக்குப்பம் பகுதிக்கு மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுகிறது. அதனை தடுத்திட நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் பெண்ணையாற்று கரையில் செக்போஸ்ட் அமைத்து போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று காலை செக்போஸ்ட் அருகே ஆற்றியல் இறங்கிய ஆண் நபர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். அதனைக் கண்ட அவ்வழியே சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவா தலைமையில் மீட்பு படையினர் ஆற்றில் இறங்கி தேடினர். இரண்டு மணி நேரத்திற்கு பின் சுமார் 37 வயது மதிக்கத்தக்க ஆண் நபரின் உடல் சிக்கியது. அவரது இடுப்பு பகுதி முழுவதும் மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.இதனால், மது பாட்டில்களை கடத்தி வந்தபோது, போலீஸ் சோதனைக்கு பயந்து ஆற்றில் இறங்கியபோது தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து இறந்த நபர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.