ஆரணி : ஆரணி அடுத்த சேவூர் அரசு மேல்நிலைபள்ளி மாணவர், சிகரெட் பிடித்ததை கண்டித்த ஆசிரியர்கள் இருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்; இருவர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதை கண்டித்து, பள்ளி மாணவ, மாணவியர் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஆசிரியர்கள் வெங்கட்ராமன், திலீப்குமார், நித்தியானந்தம், பாண்டியன், ஆகியோர் புகை பிடித்த மாணவரை கண்டித்தனர். இதில், மாணவரை தாக்கியதில் மாணவருக்கு உள்காயம் ஏற்பட்டது.மாணவரின் பெற்றோர், ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தனர்.இந்நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி செப்.23ல் ஆசிரியர்கள் திலீப்குமார், வெங்கடேசன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்தார்.
மேலும், ஆசிரியர்கள் நித்யானந்தத்தை கேளூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், பாண்டியனை முள்ளண்டிரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.இதை கண்டித்து நேற்று, மாணவ, மாணவியர், காலாண்டு தேர்வை புறக்கணித்து, பள்ளி எதிரில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியர்களின் சஸ்பெண்ட் மற்றும் இடமாற்ற உத்தரவை ரத்து செய்து, மீண்டும் இதே பள்ளியில் ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தினர்.
இதனால், பதற்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து, எஸ்.பி., கார்த்திகேயன் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி மாணவ, மாணவியரிடம் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.இதையடுத்து, மதியம், 1:15 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு மாணவ, மாணவியர் வகுப்பிற்கு சென்றனர்.