சென்னை : விடுமுறை நாட்களில், ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் சப்ளை செய்வதை தவிர்க்குமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
எனவே, 'விடுமுறை நாட்களில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அனுப்பக் கூடாது' என, ஊழியர்கள், கூட்டுறவு துறைக்கு கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று விடுமுறை நாட்களில் சப்ளை செய்யக் கூடாது என, அதிகாரிகளுக்கு மார்ச்சில் கூட்டுறவு துறை உத்தரவிட்டது. பல மாவட்டங்களில், அந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில், தற்போது, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பதிவாளரின் அறிவுரைகள் பின்பற்றப்படாமல், தொடர்ந்து விடுமுறை நாளான வெள்ளி கிழமைகளில் கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்யப்படுவதாக, அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.எனவே, மாதத்தின் முதல் இரண்டு வெள்ளி கிழமைகளில், தங்கள் மண்டலத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு சப்ளை பணி மேற்கொள்வதை தவிர்க்கவும். இந்த விபரத்தை அனைத்து முதன்மை சங்கங்களுக்கு தெரிவித்து, செயல்படுத்துவதை கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.