அரக்கோணம்:அரக்கோணம் அருகே, கணவரை கடப்பாரையால் அடித்துக் கொன்ற மனைவியை, போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உரியூரைச் சேர்ந்தவர் சீராளன், 38; சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ஷோபனா, 30; இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.சீராளன் சம்பாதிக்கும் பணத்தை மதுவுக்கு செலவிட்டு, தினமும் போதையில் மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.
நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு தம்பதிக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் மாறிமாறி அடித்துக் கொண்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஷோபனா, கடப்பாரையால் அடித்ததில், சம்பவ இடத்திலேயே சீராளன் இறந்தார்.அரக்கோணம் போலீசார் ஷோபானாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.