திருவண்ணாமலை:திருவண்ணாமலையில் நில நீர் எடுப்பு சான்று வழங்க, 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற, உதவி நிலவியல் நில நீர் பிரிவு அதிகாரியை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை லியாகத் அலி 46; இவர், திருவண்ணாமலை காஞ்சி சாலையில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் நடத்தி வருகிறார். இதில், நிலநீர் எடுப்பு சான்று அனுமதிகோரி, சென்னை தலைமையகத்திற்கு அனுமதி கேட்டு, கடந்த, செப்., 15ல் விண்ணப்பித்தார்.இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க, திருவண்ணாமலை உதவி நிலவியல் நிலநீர் பிரிவு அதிகாரி சிந்தனைசெல்வன் என்பவருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த, 23ல் சிந்தனைசெல்வன், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தார். பின், அனுமதி கடிதம் வழங்க, 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். இது குறித்து லியாகத் அலி, லஞ்ச ஒழிப்பு போலீசில் தெரிவித்தார். அவரிடம் போலீசார், ரசாயன பொடி தடவிய 50 ஆயிரம் ரூபாயை கொடுத்து, நேற்று மதியம், 2:00 மணிக்கு, அதிகாரி சிந்தனை செல்வத்திடம் கொடுக்கச் செய்தனர்.அவர் லஞ்ச பணத்தை பெற்றபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., வேல்முருகன் தலைமையிலான போலீசார், அவரை கைது செய்தனர்.