சென்னை : வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி 'சக்தி கொலு'வின் இரண்டாம் நாளான நேற்று, மலர் விற்பனை செய்யும் பெண்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, 'சக்தி கொலு' எனும் பெயரில் கொலு வைக்கப்பட்டுள்ளது.பக்தர்கள் பங்களிப்புடன், ஒன்பது படி கொண்ட பிரமாண்ட சக்தி கொலு, நான்கு திசைகளிலும் வைக்கப்பட்டுள்ளன.
பாரம்பரியம்
தமிழக பாரம்பரியம், கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் 'சக்தி கொலு' வைக்கப்பட்டுள்ளது. நம் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை கொலு பொம்மைகள் பிரதிபலிக்கின்றன. உதாரணமாக, திருமண வைபவம், வளைகாப்பு, பழங்கால கடைகள், கிராமத்து சூழல், பெருமாள் வீதி உலா, திருக்கயிலாயம், அஷ்ட லட்சுமிகள், தசாவதாரம், கல்விச்சாலை, சீதா கல்யாணம் உள்ளிட்டவை பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன.நவராத்திரியின் இரண்டாம் நாளான நேற்று காலை, மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.
மாலை லலிதா சகஸ்ரநாமபாராயணம், வேத பாராயணம், ஸ்ரீ ருத்ரம், சமஹம், ஸ்ரீ சுக்தம் நடந்தது.மாலை, அம்மனுக்கு மீனாட்சி அங்காரம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோவில் துணை கமிஷனர் முல்லையுடன் கோவில் முகப்பில் மலர் விற்பனை செய்யும் பெண்கள் இணைந்து, இரண்டாவது நாள் சக்தி கொலுவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.பின், பக்தர்களின் கொலு பாட்டு நடந்தது. நேற்று இரவு, கணேஷின் நாமசங்கீர்த்தனம்நடந்தது.