விழுப்புரம் : விழுப்புரத்தில் அதிக வட்டி தருவதாக கூறி ரூ. 25 லட்சம் வரை மோசடி செய்த நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. நாகர்கோவிலை தலைமையிடமாக கொண்டு யனிக் அசஸ்ட் புரோமோட்டர்ஸ் அண்டு எஸ்டேட் என்ற நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இதில், மாத தவணை செலுத்தினால் அதிக வட்டியுடன் பணம் திருப்பி தருவதாகவும், மாத தவணையில் வீட்டு மனை தருவதாக திட்டங்களை அறிவித்துள்ளனர்.
இதை நம்பி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த ஏராளமானவர்கள் நிதி நிறுவனத்தில் மாத தவணைக்கு பணம் கட்டி திட்டத்தில் சேர்ந்துள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு முதல் 2018 வரை பணம் கட்டியவர்கள், பணத்தை திருப்பி கேட்டபோது திட்டத்தின் முதிர்வு நாளுக்கு பிறகு பணம் தருவதாக கூறியுள்ளனர். இந்நிலையில், நாகர்கோவிலில் உள்ள நிதி
நிறுனத்தின் அலுவலகத்தை சமீபத்தில் பூட்டி விட்டு நிர்வாகிகள் தலைமறைவாகி உள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் இந்நிறுவனத்தில் ரூ. 25 லட்சத்திற்கும் அதிகமாக பணம் கட்டியுள்ளனர். பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய நிதி நிறுவன மேலாண் இயக்குநர் செய்யது அலி, இயக்குநர் ஜெயசசிதரன், எட்வின் சுதாகர், ரமேஷ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து பணத்தை பெற்று தருமாறு மரக்காணம் பகுதியைச் சேர்ந்த சுந்தர் தலைமையில் வந்த 30க்கும் மேற்பட்டோர் நேற்று எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மனுவை விசாரித்த போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.