பொள்ளாச்சி : பொள்ளாச்சி, பரம்பிக்குளம் அணையின் ஷட்டர் புதுப்பிக்கும் பணிக்கு, ஏழு கோடி ரூபாய் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பரம்பிக்குளம் அணையில் இருந்து, 17.37 அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. வினாடிக்கு, 4,513 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது, 54.20 அடி நீர்மட்டம் உள்ளது. நீர்மட்டம் குறைவதற்கேற்ப, வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்படுகிறது.சேதமடைந்த ஷட்டருக்கு மாற்றாக, புதிதாக தயாரிக்க மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. மொத்தம், ஏழு கோடி ரூபாய் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
திருச்சியில் உள்ள நிறுவனத்தில் இருந்து, 35 டன் எடையுள்ள ஷட்டர் மற்றும் தளவாடங்கள் கொண்டு வரப்படுகின்றன. சேதமடைந்த பக்கவாட்டு சுவருக்கு மாற்றாக, இரும்பு துாண் அமைக்கப்படுகிறது. இவை கனரக வாகனங்களில் கொண்டு வரப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன், பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். அரசு உத்தரவு கிடைத்ததும் பணிகளை துவங்க போதுமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.