மாங்காடு:கால்வாய் பணிக்காக அகற்றப்பட்ட உயர் கோபுர மின் விளக்கு கம்பத்தை, மீண்டும் அமைக்காததால் இரவு நேரங்களில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
குன்றத்துார் - குமணன்சாவடி சாலையில், மாங்காடு, கங்கையம்மன் கோவில் சந்திப்பை தினமும், ஆயிரக்கணக்கான மக்கள் கடக்கின்றனர். இப்பகுதி, பூந்தமல்லி நகராட்சி கட்டுப்பாட்டில் வருவதால், அங்கு உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, 2008ல், 3 கோடி ரூபாய் செலவில், உயர் கோபுர மின் விளக்கு அமைத்தனர். பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இது வசதியாக இருந்தது. இரவில், சிரமமின்றி சாலையை கடந்து வந்தனர். இந்த நிலையில், ஆறு மாதங்களுக்கு முன், அச்சந்திப்பில் மழை நீர் கால்வாய் கட்டும் பணி துவங்கியது.அப்போது, உயர் கோபுர மின் விளக்கு கம்பத்தை அகற்றி சாலையோரம் வீசினர். கால்வாய் கட்டும் பணிகள் முடிந்து, இரண்டு மாங்களுக்கு மேல் ஆகியும், மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் விட்டு விட்டனர்.
இதனால், இரவில், வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுகின்றனர். வாகனங்கள் இஷ்டத்திற்கு திரும்புவதால் நெரிசலும், விபத்தும் ஏற்படுகிறது.இது குறித்து, பூந்தமல்லி நகராட்சியில் பல முறை தகவல் தெரிவித்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.மக்கள் நலன் கருதி, சாலையோரம் வீசப்பட்ட உயர் கோபுர மின் கம்பத்தை நட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.