விருதுநகர்--விருதுநகர் மாவட்டத்தில் திறக்கப்பட்ட நோக்கத்தை மறந்து கிராமப்புற சமுதாய கூடங்கள் பல மூடியே கிடக்கின்றன.விருதுநகர் மாவட்டத்தின் 450 ஊராட்சிகளிலும் தேவைக்கேற்ப சமுதாய கூடங்கள் திறக்கப்பட்டது. இவற்றில் பல சேதமடைந்தும், பயன்பாடின்றியும் முடங்கி கிடக்கின்றன. ஏழை எளிய மக்களின் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை குறைந்த செலவில் நடத்துவதற்காக தான் இந்த சமுதாய கூடங்கள் அமைக்கப்பட்டன. இவை தவிர அரசின் தடுப்பூசி முகாம்கள் நடத்தவும் பயன்படுத்தப்பட்டு வந்தன.இந்நிலையில் இவை சமீப காலமாக பயன்பாட்டில் இல்லாமல் உள்ளன. எதற்காக இந்த திட்டங்கள் துவங்கப்பட்டதோ அதற்கான நோக்கம் நிறைவேறாமல் உள்ளது. பொதுமக்களும் இடவசதி உள்ளிட்ட காரணங்களுக்காக தனியார் மண்டபங்களுக்கு செல்ல துவங்கி உள்ளதாலும், நகர்ப்புற மண்டபங்களுக்கு செல்வதாலும் சமுதாய கூடங்கள் பாழாகி வருகின்றன. சில சமுதாய கூடங்கள் பழசாகி சிதிலமடைந்துள்ளன.தேவைப்படும் இடங்களில் சமுதாய கூடங்களை முறையாக செயல்படுத்தவும், பயன்பாடற்ற இடங்களில் முடங்கி கிடப்பதற்கு பதிலாக மற்ற அரசின் தேவைகளுக்கு பயன்படுத்தலாம். சிதிலமடைந்த சமுதாய கூடங்களை சீரமைக்கவும் செய்ய வேண்டும்.