நான்கு பாடங்களுக்கு மாற்று பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணிக்கு செல்லாததால், கடவூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தின் தென்கோடி எல்லையாக உள்ள கடவூரில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 34 கிராமங்களை சேர்ந்த, மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், பிளஸ் 1ல், 99 பேரும், பிளஸ் 2வில், 129 பேரும்என மொத்தம், 228 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இங்கு, பிளஸ் 1ல் மூன்று பிரிவுகள் உள்ள நிலையில், அதில், 4 முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
இந்தப் பள்ளியில் போதிய வசதிகளோ, தேவைப்படும் அளவில் ஆசிரியர்களோ இல்லை. குறிப்பாக, வேதியியல், கணிதம், பொருளியல், வணிகவியல் என நான்கு பாடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
இப்பள்ளிக்கு கரூர், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து ஆசிரியர்கள் வருகின்றனர். பள்ளிக்கு வந்து செல்ல துாரம் என காரணம் கூறி, சிறிது நாட்களிலேயே கலந்தாய்வு மூலம் வேறு பள்ளிக்கு மாற்றலாகி சென்று விடுகின்றனர். இருப்பினும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட கூடாது என்பதற்காக, நான்கு படங்களுக்கு மாற்றுப் பணியில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், வாரத்தில், 2 நாட்கள் பாடம் எடுக்க வேண்டும். ஆனால், அவர்களும், உடல்நிலை உட்பட பல்வேறு காரணங்களை கூறி விடுப்பு எடுத்து சென்று விடுகின்றனர்.
இதுநாள்வரை, நான்கு பாடங்களில் ஒரு பாட வேளை கூட நடந்ததாக தெரியவில்லை. பாடங்களுக்கு ஆசிரியர்களே இல்லாததால் பள்ளி மாணவ, மாணவியர், வீணாக பொழுதை கழித்து வீடு திரும்பும் நிலை, நான்கு மாதங்களாக தொடர்கிறது.
தற்போது காலாண்டு தேர்வு தொடங்கியுள்ள நிலையில், இந்த படங்களுக்கு தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.