குளித்தலை அரசு மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்குரிய வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை. பெயர் பலகை கூட மாற்றப்படாமல் உள்ளது.
அரசால் அறிவிக்கப்பட்ட படி, குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு உரிய வசதிகளுடன் செயல்பட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சமூக நல ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே இதற்காக போராட்டமும் நடந்துள்ளது.
இந்நிலையில், குளித்தலை நகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ''குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை காணவில்லை, திருடி சென்றவர்களை கண்டுபிடித்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து, எங்கள் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை குளித்தலை மக்களிடம் ஒப்படைத்திடு, இப்படிக்கு, தேடிக் கொண்டிருப்பவர்கள், பொதுமக்கள், அனைத்து அரசியல் கட்சிகள், சமூக நல இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள், குளித்தலை'' என்ற வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரால் குளித்தலை நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.