எலச்சிபாளையம் யூனியன், 87 கவுண்டம்பாளையம் பஞ்., குமரமங்கலத்தில், நாமக்கல்- திருச்செங்கோடு நெடுஞ்சாலை ஓரத்தில், கடந்த சில மாதங்களாக வயல்வெளியில் இருந்து வெளியேறும் மழைநீர் மற்றும் அப்பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதில் கடும் துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, அருகில் வசிப்பவர்கள், இவ்வழியாக செல்லும் மாணவர்கள், மக்கள், சுவாச கோளாறு ஏற்பட்டு சிரமப்படுகின்றனர். டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்தொற்றுகள் உருவாக வாய்ப்புள்ளதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். சாலையோரம் தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்றக்கோரி, மக்கள் பலமுறை பஞ்., நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
ஆகவே, மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றவும், இப்பகுதியில் கழிவுநீர் செல்லும் வகையில், முறையான வடிகால் வசதியும் அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.