''நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, நாமக்கல்லில், 127 தடுப்பணைகள் கட்டப்பட உள்ளது,'' என்று மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்தார்.
சேந்தமங்கலம் யூனியன், கொல்லிமலை அடிவாரப்பகுதியான பொம்மசமுத்திரம் பஞ்.,சில், சம்பூத்து ஓடை மற்றும் கருவட்டாற்றின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளை, கலெக்டர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டார். தடுப்பணை அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில், கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதா என்று பொதுமக்களிடம் கேட்டறிந்த கலெக்டர், கிணறுகளில் நீர் மட்டத்தை நேரில் பார்வையிட்டார். பின், அரசடிக்கோம்பை கிராமத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை பார்வையிட்ட கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில், கடந்த ஒரு ஆண்டில், எலச்சிபாளையம் வட்டத்தில், 2 தடுப்பணைகள், எருமப்பட்டியில், 16, கபிலர்மலையில், 2, கொல்லிமலையில், 43, நாமக்கல்லில், 14, நாமகிரிப்பேட்டையில், 16, புதுச்சத்திரத்தில், 14, சேந்தமங்கலத்தில், 15, திருச்செங்கோட்டில், 5, என மொத்தம், 11.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 127 தடுப்பணைகள் கட்ட திட்டமிடப்பட்டு, 44 தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தடுப்பணைகள் கட்டும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. தடுப்பணைகள் கட்டப்படுவதால் மழைக்காலத்தில் பெய்யும் மழைநீர் சேகரிக்கப்பட்டு, நிலத்தடி நீர் மட்டம் உயர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
ஆய்வில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முகமை வடிவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.