சேலம்: சேலத்தில், வெள்ளைக்கல் சுரண்டி, கடத்துவதில், தி.மு.க., - பா.ம.க.,வினர் இடையே ஏற்பட்ட மோதலில், இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. சிலர் காயம் அடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்
பட்டுள்ளதால், பதற்றத்தை தணிக்க, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சேலம், ஊத்துக்கிணறு பகுதியை சேர்ந்தவர்கள் பிரசாந்த், 28, சீனிவாசன், 26. தி.மு.க.,வில் உறுப்பினர்களாக உள்ள இவர்கள், கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், அப்போதைய ஆளுங்கட்சியினர், அதிகாரிகளை, 'கவனிப்பு' செய்து, மாமாங்கத்தில் வெள்ளைக்கல் கடத்தி வந்தனர். தற்போது, தி.மு.க., ஆட்சியிலும், அதிகாரிகளை, 'கவனிப்பு' செய்து கடத்தினர்.
ஆனால், பா.ம.க.,வினர் சிலர், மேற்கு தொகுதியில் எங்கள் கட்சியை சேர்ந்தவர், எம்.எல்.ஏ.,வாக உள்ளதால், வெள்ளைக்கல் கடத்தினால் மாமூல் தர வேண்டும் என கேட்டுள்ளனர். தி.மு.க.,வினர் தர முடியாது என தெரிவித்துள்ளனர். இதில் இரு தரப்பினர் இடையே முன்
விரோதம் இருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, தி.மு.க.,வினர் மினி லாரியில் வெள்ளைக்கல்லை கடத்தினர். பா.ம.க.,வினர், அந்த லாரியை முற்றுகையிட்டு, வெளியே கொண்டு செல்ல விடாமல் மறித்தனர். இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். பா.ம.க.,வினரின், 3
பைக்குகள் தீ வைத்து எரிக்கப்
பட்டன; இரு பைக்குகள் அடித்து நொறுக்கப்பட்டன.
மோதலில் காயம் அடைந்த, தி.மு.க.,வை சேர்ந்த பிராந்த், சீனிவாசன், பா.ம.க.,வில், ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த பூபதி, 33, நரசோதிப்பட்டி கார்த்தி, 22, ஆகியோர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மாமாங்கத்தில் போலீஸ் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
'சட்டசபையில் உண்ணாவிரதம்'
பா.ம.க.,வின், சேலம் மேற்கு எம்.எல்.ஏ., அருள், நேற்று கலெக்டர் கார்மேகத்திடம் அளித்த மனு:
தொகுதிக்கு உட்பட்ட வெள்ளக்கல்பட்டி ஊராட்சி, மாநகராட்சி, 1வது வார்டு மாமாங்கத்தில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் வெள்ளைக்கற்கள் திருடப்படுவதை பலமுறை தெரிவித்துள்ளேன். போலீசார், சுரங்கத்துறை துணை இயக்குனருக்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
நேற்று முன்தினம் இரவு, 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் வெள்ளைக்கற்கள் திருடப்படுவதாக சில இளைஞர்கள் தெரிவித்தனர். அவர்களிடம், வீடியோ எடுத்து அனுப்ப அறிவுறுத்தினேன். இளைஞர்கள் வீடியோ எடுத்தபோது, கும்பலாக வந்தவர்கள், இளைஞர்களின் வாகனத்துக்கு தீ வைத்ததோடு, அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல்
நடத்தியதால், அவர்கள்
மருத்துவமனையில் உள்ளனர்.
இப்பகுதியில், 20க்கும் மேற்பட்ட மேக்னசைட் கல் அரவை ஆலைகள், அரசு அனுமதியின்றி இயங்குகின்றன. அந்த ஆலை
களுக்கு, திருடப்படும் வெள்ளைக்கற்கள் மூலப்பொருட்களாக உள்ளன. முறையாக ஆய்வு செய்து ஆலைகளை தடை செய்யவும், அடியாட்களை வைத்து கனிம வளத்தை திருடுவோர் மீதும், கொலைவெறி தாக்குதல் நடத்தியவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனுமதியின்றி சொந்தமாக மில் வைத்து வெள்ளைக்கல் எடுக்கும் உரிமையாளர்கள் விபரம்: மாமாங்கம் சுற்றுப்பகுதியில் மனோகரன், மணிகண்டன், பெருமாள், கிேஷார், விஜய், வேல், இருசன், கோபால், ராமநாதன், செல்வக்குமார், பாப்பாத்தி, மாரியப்பன், ராமு, ரமேஷ்; கருப்பூரில் செல்வம், முருகன், சுப்ரமணி, மனோகரன் பெயரில் மில் உள்ளது. இவர்களுக்கு கலைச்செல்வன், வடிவேல் ஆகியோர், மொத்தமாக வெள்ளைக்கல் வினியோகிக்கின்றனர். இவர்களுக்கு புரோக்கராக இருந்து மாமூல் பெறுவோர் மனோகரன், அரிச்சந்திரன், நவீன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
பின்னர் அருள் கூறுகையில், ''மனு மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், முறையாக மனு கொடுத்து சட்டசபை நடக்கும்போது, அதன் வளாகத்தில் கனிம வளத்தை பாதுகாக்க உண்ணாவிரதம் இருப்பேன்,'' என்றார்.