செஞ்சி : ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி கல்லுாரி மருத்துவமனையில் தென்னை நார் மற்றும் சார்பு தொழில் பயிற்சி பெறும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை சார்பில் பொள்ளாச்சி மண்டல கயிறு வாரியத்தின் கீழ் தென்னை நார் மற்றும் சார்பு தொழில் குறித்து மகளிருக்கான 3 நாள் பயிற்சி முகாம் செஞ்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.இறுதியாக பயிற்சியில் பங்கேற்ற பெண்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லுாரி மருத்துவமனையில் நடந்தது.செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
கல்லுாரி தாளாளர் வழக்கறிஞர் ரங்கபூபதி முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி கயிறு வாரிய ஆய்வாளர் வித்யாதரன் வரவேற்றார். அமைச்சர் மஸ்தான் மருத்துவ முகாமை துவக்கி வைத்து பேசினார்.விழுப்புரம் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தாமோதரன், சத்தியமங்கலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் விஜயகுமார், திருவண்ணாமலை ஏழ்மை போக்கும் சமூக அமைப்பு செயலாளர் சங்கர், சோ.குப்பம் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் தென்னை நார் மற்றும் சார்பு தொழில் புரிபவர்களுக்கான பயிற்சியும், தொழில் வாய்ப்புகள், கடனுதவிகள் குறித்து விளக்கினர்.ஒன்றிய செயலாளர் விஜயராகவன், பச்சையப்பன், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன் மற்றும் கயிறு வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.