விழுப்புரம் : பிரதம மந்திரியின் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் 12வது தவணைத்தொகை பெற ஆதார் விபரங்களை பதிவேற்றம் செய்வது அவசியம் என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு: பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கவுரவ ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், நிலம் உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை 2000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் இதுவரை 2 லட்சத்து 7 ஆயிரத்து 273 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள் 12வது தவணைத் தொகை பெற தங்களது ஆதார் விபரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியம்.தங்கள் ஆதார் எண்ணுடன் மொபைல் போன் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள், தங்கள் விபரங்களை பி.எம்., கிசான் திட்ட வலைதளத்தில் சரிபார்ப்பு செய்யலாம்.
ஆதார் எண்ணுடன் மொபைல் போன் எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள இ சேவை மையங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள தபால் நிலைய முகவர்கள் மூலம் தங்களது ஆதார் விபரங்களை உள்ளீடு செய்து தங்களது விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும்.இந்த விபரங்களை சரிபார்ப்பு செய்தால் மட்டுமே அடுத்த தவணை ஊக்கத்தொகை கிடைக்கப்பெறும்.
மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 121 விவசாயிகள் மட்டுமே ஆதார் விபரங்களை பி.எம்., கிசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். மீதமுள்ள 99 ஆயிரத்து 152 விவசாயிகள் உடனடியாக பொது சேவை மையத்தை அணுகிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.