பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே, ஹிந்து முன்னணி பிரமுகர் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டதில், வீட்டின் எதிரே நிறுத்தியிருந்த, 'மஹிந்திரா' ஜீப்பின் முன் பகுதி சேதமடைந்தது.
கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரைச் சேர்ந்தவர் ராமதாஸ், 55; பு.முட்லுாரில் உள்ள ராம அனுமான் கோவில் அறங்காவலராகவும், ஹிந்து முன்னணி பிரமுகராகவும் உள்ளார்.இவரது வீட்டில், கடந்த 4ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதில், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.நேற்று அதிகாலை 3:30 மணிக்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், மண்ணெண்ணெய் குண்டுகளை வீசியுள்ளனர்.
இதில், மண்ணெண்ணெய் குண்டு ஒன்று, வீட்டின் முன் இருந்த தென்னை மரம் மீது பட்டு விழுந்து எரிந்தது.மற்றொரு மண்ணெண்ணெய் குண்டு, வீட்டின் எதிரே நிறுத்தியிருந்த பழைய மஹிந்திரா ஜீப் மீது விழுந்தது. இதில், ஜீப்பின் முன் பக்கம் தீயில் கருகியது.சத்தம் கேட்டு ராமதாஸ் மற்றும் அவரது மகன் பிரபாகரன் வந்து பார்த்தனர். அப்போது, பைக்கில் மர்ம நபர்கள் இரண்டு பேர் தப்பிச்சென்றது தெரிந்தது.
எஸ்.பி., சக்தி கணேசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மோப்ப நாய் 'கூப்பர்' வரவழைக்கப்பட்டது. தடய அறிவியல் துறை, கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் குணபாலன், வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார். இச்சம்பவம், பரங்கிப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, திண்டுக்கல், குடைபாறைப்பட்டியில் பா.ஜ., தலைவர் பால்ராஜ் குடோனில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், பேகம்பூரை சேர்ந்த சிக்கந்தர், 29, என்பவர் கைது செய்யப் பட்டார். இதில் தொடர்புடைய, பேகம்பூர் ஹபீப் ரகுமான், 27, முகமது இலியாஸ், 26, முகமது ரபீக், 26, ஆகியோரை தேடி வந்த நிலையில், மூவரும் நேற்று திண்டுக்கல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
அதே போல, கோவையில், பா.ஜ., பிரமுகர் கடை மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில், பி.எப்.ஐ., எனப்படும் தடை செய்யப்பட்ட, 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பின் உறுப்பினர் முகம்மது ரபீக், 31, நேற்று கைது செய்யப்பட்டார்.