திருப்பூர்;'வைகிங்' ஈஸ்வரனை தலைவராக கொண்டு சைமா சங்க புதிய நிர்வாகிகள் நேற்று பதவியேற்றனர். 'இனி, 'சைமா' என்ற ஒரே அணி தான். தொழில் முன்னேற்றமே குறிக்கோள்,' என சூளுரைக்கப்பட்டது.திருப்பூர் தொழில்துறையினர் தாய் சங்கமான தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத்துக்கு (சைமா), 2022-25ம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. வேட்பாளர்கள் இரண்டு அணியாக பிரிந்து, போட்டியிட்டனர்.போட்டியாளர் இல்லாததால், வைகிங்' ஈஸ்வரன், போட்டியின்றி மீண்டும் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிற பதவிக்கான தேர்தல், ஹார்வி ரோட்டில் உள்ள 'சைமா' சங்க வளாகத்தில், ஓட்டுப்பதிவு, நேற்று காலை, 9:00 மணிக்கு துவங்கியது.சங்க உறுப்பினர்கள் மிகுந்த ஆர்வமுடன் ஓட்டளித்தனர். மதியம், 2:00 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது. மொத்தம், 449 வாக்காளரில், 427 பேர் ஓட்டளித்தனர். மாலை, 3:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.தேர்தல் அதிகாரி வக்கீல் ராமமூர்த்தி, தேர்தல் வெற்றியாளர் பெயர்களை அறிவித்தார். சங்க தலைவராக மீண்டும் ஈஸ்வரன் பதவியேற்றார். தேர்தலில் வெற்றி பெற்று, துணை தலைவராக பாலச்சந்தர், செயலாளராக கீதாஞ்சலி கோவிந்தப்பன், பொருளாளராக சுரேஷ்குமார், இணை செயலாளர்கள் பழனிசாமி, தனபால் பதவியேற்றனர்.சிவக்குமார், பழனிசமி, ராஜ்குமார், நாகராஜ், சசிகுமார், துரை அருண், சாமிநாதன், ரங்கசாமி, அருண்பிரகாஷ், பொன்னுசாமி, சண்முகசுந்தரம், தியாகராஜன், சுப்பிரமணியம், பழனிசாமி, தனசரவணன், ஆனந்தன், முருகசாமி, ராஜேஷ்கண்ணா, கோபால கிருஷ்ணன், நடராஜன், லட்சுமணன் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக பதவியேற்றனர்.'தேர்தலில் இரண்டு அணிகளாக போட்டியிட்டோம்; இனி எல்லாரும் 'சைமா' என்கிற ஒரே அணிதான். அனைவரும் கரம்கோர்த்து, தொழில் முன்னேற்றமே குறிக்கோள் என தொழில் வளர்ச்சிக்காக பாடுபடுவோம்' என, சங்க தலைவர் 'வைகிங்' ஈஸ்வரன் பேசினார். இதனை புதிய நிர்வாகிகள் வரவேற்றனர்.