திருப்பூர்:ஆயுதபூஜை, சரஸ்வதிபூஜை விழாவில், வீடு, நிறுவனங்களை அலங்கரிக்க வசதியாக, அசத்தலான ரெடுமேடு தோரணம் உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.தொழில் நகரமாகிய திருப்பூரில், சரஸ்வதிபூஜை, ஆயுதபூஜை வந்ததும், தீபாவளி பண்டிகை வந்தது போல் தொழிலாளர் மகிழ்ச்சி அடைகின்றனர். கடந்த காலங்களில், ஆயதபூஜை நாளிலேயே, போனஸ் பட்டுவாடா நடந்து கொண்டிருந்ததே அதற்கு காரணம்.வழக்கமாக, வாழைக்கன்று கட்டி, மாவிலை தோரணம் மற்றும் மலர்களால் அலங்கரிப்பர். நாளுக்கு நாள் விழா கொண்டாட இளைஞர்கள் ஆர்வம் அதிகரித்துள்ளதால், 'கலர்புல்' ரெடிமேடு தோரணங்கள் கட்டி, வீடு மற்றும் தொழிற்சாலைகளை அலங்கரிப்பது அதிகரித்துள்ளன.தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் தயாரிக்கப்பட்ட, தோரணங்கள், நிலவு தோரணம், மாவிலை தோரணம் போன்றவை ஏராளமான டிசைன்களில் விற்பனைக்கு வந்துள்ளன. காங்கயம் ரோடு, கொங்கு மெயின் ரோடு, அவிநாசி ரோடு பகுதிகளில் உள்ள கடைகளில், தற்போதிருந்தே, வியாபாரம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.வியாபாரிகள் கூறுகையில், 'கொரோனா ஊரடங்குக்கு பின், திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி முதல், ஒவ்வொரு விழாவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு சரஸ்வதி பூஜை, ஆயதபூஜை விழாவை விமரிசையாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி விட்டனர். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், பல்வேறு வகையான மெட்டீரியல்களில், கலர்புல் தோரணம், மாலைகள் விற்பனைக்கு வந்துள்ளன,' என்றனர்.