கோவை: மாணவர்களிடையே போதைப்பழக்கத்தை தடுக்க, மாநில அளவில் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள, தமிழ்நாடு சுயநிதி, கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரிகளின் சங்கம் திட்டமிட்டுள்ளது.
சமீபகாலமாக, மாணவர்களிடையே போதைப்பழக்கம் அதிகரித்து வருகிறது. 'மாணவர்கள் போதைப்பழக்கத்துக்கு அடிமையாவது வருத்தம் அளிக்கிறது' என, சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தமிழக முதல்வரே கவலை தெரிவித்திருக்கிறார். பல்வேறு அமைப்பினர் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், போதைப் பழக்கத்தால் ஏற்படும் விபரீதம் குறித்து, மாநில அளவில், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, தமிழ்நாடு சுயநிதி, கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரிகளின் சங்கமும் திட்டமிட்டுள்ளது.
சங்க தலைவரும், கோவை ஏ.ஜே.கே., கலை, அறிவியல் கல்லுாரி செயலாளருமான அஜித் குமார் லால் மோகன் கூறியதாவது:போதையில்லா சமுதாயத்தை உருவாக்க வேண்டும். போதைக்கு அடிமையாகக் கூடிய இளைஞர்களால், தனிமனிதன், சமுதாயம் என, பலவகைகளிலும் சமூக சீர்கேடுகள் ஏற்படுகின்றன. மாணவர்கள் எதிர்காலம் கருதி, அனைத்து தனியார், அரசு உதவிபெறும் கல்லுாரிகள் ஒன்றிணைந்து போதைப் பொருள்கள் பயன்படுத்தாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
போலீசாருடன் இணைந்து போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு முகாம்கள் நடத்துதல், பேரணிகள், போதைப்பொருள் உறுதிமொழி, கட்டுரை, ஓவியம், வினாடி-வினா, பேச்சு பேட்டி, சர்வதேச போதைப்பொருட்கள் ஒழிப்பு தினம் அனுசரிப்பு உட்பட விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.