திருநெல்வேலி : திருநெல்வேலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஊழியர்கள் இருவரை சுட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட எல்லை பாதுகாப்பு படை வீரருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.12,000 அபராதமும் விதித்து கோர்ட் உத்தரவிட்டது.
2011 மே 2ல் நாங்குநேரியை சேர்ந்த தாயப்பன் என்பவருடன் சேர்ந்து கொண்டு முகமூடி அணிந்து, அதே பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்குள் சென்று கொள்ளையடிக்க முயற்சித்தனர். தடுத்த வங்கி ஊழியர் சண்முக சங்கரை துப்பாக்கியால் சுட்டார். கிளார்க் ராஜாவிற்கும் காயம் ஏற்பட்டது. பன்னீர்செல்வம் உட்பட இருவரையும் ஏர்வாடி போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் தாயப்பன் உடல் நலம் பாதித்து இறந்து விட்டார். வழக்கு நாங்குநேரி கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்தது. நீதிபதி ராமதாஸ், பன்னீர் செல்வத்திற்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.