மதுரை : 'மதுரை மாவட்டம், அனச்சூரில், சட்ட விரோத மண் குவாரியை தடுக்க தவறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை வேண்டும். விதிகளை மீறி மண் அள்ளிய நபரிடம் அபராத தொகையை வசூலிக்க வேண்டும்' என, கலெக்டருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.
மதுரை கிழக்கு தாலுகாவிற்கு உட்பட்டது அனச்சூர். இங்கு பிரபாகரன் என்பவர் சட்டவிரோதமாக மண் குவாரி நடத்தினார். கனிம வளத்துறை இயக்குனர், மதுரை கலெக்டர், கனிமவள உதவி இயக்குனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு:அனச்சூரில் சவுடு மண் அள்ள அரசிடம் பிரபாகரன் அனுமதி பெற்றிருந்தாலும், சட்ட விரோதமாக, 35 அடி ஆழத்திற்கு தோண்டி மண் அள்ளியதாக மனுதாரர் தரப்பு கூறுகிறது.
அதிகளவு மண்ணை தனக்குத் தெரியாமல் தொழிலாளர்கள் அகற்றியுள்ளனர் என, அந்த நபர் தெரிவித்துள்ளார். அபராதம் செலுத்த உத்தரவாதம் அளித்துள்ளார்.அவருக்கு, 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது என, கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதன் மூலம் சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டது தெளிவாகிறது.இதை தடுக்க அதிகாரிகள் தவறி விட்டனர். எனவே, பிரபாகரனிடமிருந்து அபராத தொகையை நான்கு வாரங்களில் வசூலிக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மனு பைசல் செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.