சென்னை:கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு பிரிவில் காவலராக இருப்பவர் லட்சுமணன், 31. இவர், அமர்வு நீதிமன்ற பணி நிமித்தமாக, கடந்த 27ம் தேதி கொடுங்கையூர், ஆர்.வி.நகர், அய்யப்பன் கோவில் தெருவில் வசிக்கும் வரலட்சுமி என்பவருக்கு, வழக்கு தொடர்பான சம்மன் அளிக்கச் சென்றார்.
அங்கு போதையில் இருந்த ரவுடி செந்தில் என்பவர், லட்சுமணனிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும், அவரை கீழே தள்ளி உதைத்து தாக்கி, இருசக்கர வாகனத்தின் சாவியை பிடுங்கி வைத்துக் கொண்டார்.இதில் படுகாயமடைந்த லட்சுமணனை, ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இவர் அளித்த புகாரின்படி, கொடுங்கையூர் போலீசார் விசாரித்ததில், கொடுங்கையூர் பார்வதி நகரை சேர்ந்த ரவுடி செந்தில், 36, சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது. இவர் மீது, பல வழக்குகள் உள்ளன. தலைமறைவான செந்திலை, போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.